பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரில் புதிதாக அகிலா என்ற தனியார் திருமண மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்வதற்கு தடையில்லா சான்று (NOC) பெறுவதற்காகப் பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தடையில்லா சான்று வழங்குவதற்கு தங்களுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் துணை வட்டாட்சியர் பழனியப்பன் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து லஞ்சம் தர விரும்பாத தனியார் திருமண மண்டப மேலாளர் துரைராஜ், பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை அணுகி உள்ளார். அவர்களின் ஆலோசனையின் பேரில் நேற்று மாலை பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்து துணை வட்டாட்சியர் கேட்டிருந்தபடி, துரைராஜ் லஞ்சப் பணத்தைக் கொடுக்க வந்திருப்பதாக துணை வட்டாட்சியர் பழனியப்பனிடம் தெரிவித்தார்.
பழனியப்பன் அங்கிருந்த கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமியை அப்பணத்தை வாங்கி வர சொன்னதாகக் கூறப்படுகிறது. அதன்படி, நல்லுசாமி ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை துரைராஜிடமிருந்து வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணைக்காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், துணை வட்டாட்சியர் பழனியப்பன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் பழனியப்பன் நெஞ்சுவலி காரணமாக நேற்றிரவு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துணை வட்டாட்சியர் பழனியப்பன் இன்று அங்கிருந்து தப்பி ஓட்டியுள்ளார். தப்பி ஓடிய துணை வட்டாட்சியரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி கொலை வழக்கு; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பு