தேனி: 18வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் (மார்ச் 27) முடிவடைந்த நிலையில், இன்று (மார்ச் 28) வேட்புமனு பரிசீலனை பணியானது நடைபெற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.
இதில், "தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனை குறித்த கூட்டம், தேனி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (மார்ச் 28) தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் 33வது எண்ணில் வந்த டிடிவி தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படாததால், அதில் உள்ள விவரங்களை சரி பார்க்க முடியாத நிலை இருந்தது. இதனால், டிடிவி தினகரனின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அப்போது, அமமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதனைச் சரிபார்க்க எதிர்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தெரிவித்தார். இதனையடுத்து, டிடிவி தினகரனின் வேட்பு மனு ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "கொங்குச் சீமையின் கொள்கை வேங்கையை இழந்துவிட்டேன்" - கணேசமூர்த்திக்கு மறைவுக்கு வைகோ இரங்கல்! - Ganeshamurthi Death