சென்னை: நடந்து முடிந்த 18-ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக மற்றும் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில், திமுக போட்டியிட்ட 21 தொகுதிகள் மற்றும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்பி உட்பட 22 பேர் டெல்லி செல்ல உள்ளனர்.
இந்நிலையில் திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு உரியவர்களை நியமித்து திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் படி மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.,யும், மக்களவை குழுத் தலைவராக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பியும், மக்களவை குழு துணைத் தலைவராக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்பியும், மக்களவை கொறடாவாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பியும் நியமிக்கப்படுகின்றனர்.
மேலும், மாநிலங்களவை குழுத் தலைவராக திமுக கொள்கைபரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்பி.,யும், மாநிலங்களவை குழு துணைத் தலைவராக தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், மாநிலங்களவை கொறடாவாக திமுக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், இரு அவைகளின் பொருளாளராக திமுக கொள்கைபரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகனும் நியமிக்கப்படுள்ளனர்.
திமுகவில் புதிய மாற்றம்: திமுக நாடாளுமன்ற குழு நிர்வாகிகள் அறிவிப்பில் முக்கியமாக பார்க்கப்படுவது திமுகவில் இதுவரை மக்களவை மாநிலங்களவை என தனித்தனி நிர்வாகிகளே நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இப்போது முதல் முறையாக மக்களவை மாநிலங்கலவை என இரண்டையும் சேர்த்து நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
சோனியா, மம்தா வரிசையில் கனிமொழி: தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் மக்களவை மாநிலங்களவை என இரண்டுக்கும் சேர்த்து நாடாளுமன்ற கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அதே போல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலும் மக்களவை மாநிலங்களவை என இரண்டுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த வரிசையில் இப்போது திமுகவிலும் மக்களவை மாநிலங்களவை என இரண்டுக்கும் சேர்த்து நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டு இருப்பதன் மூலம் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி வரிசையில் இனி கனிமொழியும் வலம் வர உள்ளார்.
அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் 2007-ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்ட கனிமொழி 2007-ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் 2019 முதல் 2024 வரை தூத்துக்குடி மக்களவை உறுப்பினராகவும் வலம் வந்த கனிமொழி இப்போது மீண்டும் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்ததுடன் நாடாளுமன்றத்தில் 18 ஆண்டு கால அனுபவம் பெற்ற ஒருவராகவும் வலம் வருகிறார்.
திமுகவில் துணை பொதுச்செயலாளர் என்ற முக்கியமான பதவியில் வலம் வந்து கொண்டிருக்கும் கனிமொழி இனி திமுகவின் டெல்லி முகமாகவும் திமுக நாடாளுமன்ற கட்சி தலைவர் என்ற அடிப்படையில் இனி மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்களிலும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் அரசியல் ரீதியாக டெல்லியின் முக்கிய கூட்டங்களிலும் கனிமொழி முன்னிலை வகிப்பார் என்று அறிவாலயம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சிக்குள் நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவர் முடிவெடுக்க முடியுமா? - வானதி சீனிவாசன் கேள்வி