ஈரோடு: ஈரோட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் செலவைக் கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது. அவ்வமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் மணி பேசுகையில், "2024ம் நாடாளுமன்ற தேர்தலில் யார் பாஜக தலைமையிலான ஆட்சி வரக்கூடாது என்ற அடிப்படையில் தமிழகத்தின் பெரியார் சிந்தனைகளை வளர்த்து வரும் திமுக தலைமையிலான தமிழகத்தில் உள்ள இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்துச் செயல்படுவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், குறிப்பாக சாதிய கட்சிகள் என்ற பெயரில் பல கட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும் வன்முறை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் ஆணவக்கொலைக்கு ஆதரவாகவும் கோவில் நுழைவு போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நாமக்கல் தொகுதி நாடளுமன்ற உறுப்பினர் சூரியமூர்த்தியை வேட்பாளராக அறிவித்து இருக்கும் முடிவை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாற்றம் செய்ய வேண்டும்.
இதனை அக்கட்சியின் தலைமைக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். இல்லையென்றால் அந்த வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப் போவதில்ல" எனத் தெரிவித்தார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கீடு செய்யப்பட்டது போல் இந்த முறையும் நாமக்கல் நாடளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொமதேக கட்சியின் இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தியை வேட்பாளராக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்றில் அவர் சாதிய வன்மத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன. இதற்கு தமிழகம் முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. மேலும் அறப்பேர் இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு கடுமையாக கண்டனங்கள் தெரிவித்தனர்.
இந்த வீடியோ விவகாரம் குறித்து சூரியமூர்த்தி ஏற்கனவே தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்திருந்தார் ஆனாலும் வேட்பாளராக மாதேஸ்வரனை மாற்றி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒத்த வீடியோவால் பறிபோன எம்பி வாய்ப்பு.. திமுக கூட்டணியின் நாமக்கல் வேட்பாளர் மாற்றத்தின் பின்னணி என்ன? - KMDK Namakkal candidate changed