திருச்சி: திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு 15 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் இருந்து 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில். இவர் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்லின் மெயில் (15). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ஜாக்குலினுக்கு நூடுல்ஸ் செய்து சாப்பிடுவது பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி நூடுல்ஸை விரும்பிச் சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி, ஜாக்குலின் வழக்கம்போல் ஆன்லைனில் வாங்கிய நூடுல்ஸ் பாக்கெட்டை நேற்று இரவு செய்து சாப்பிட்டு படுத்து தூங்கியுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை ஜாக்குலின் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஜாக்குலின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், ஜாக்குலின் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனிடையே, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் குரங்கு அம்மை நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "திருச்சியில் நேற்று 15 வயது சிறுமி அமேசானில் ஆர்டர் செய்த சீன நிறுவனத்தின் புல்டாக் என்ற நூடுல்ஸ் (Buldak Noodles) மற்றும் குளிர்பானத்தைச் சாப்பிட்டு விட்டு தூங்கிய மாணவி உயிரிழந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை உடனடியாக ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பிட்ட சீன நூடுல்ஸ் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று முழுமையாக சோதனை செய்ததில், ஒரு மொத்த விற்பனையாளரிடம் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்" என்றார்.
குரங்கம்மை சோதனை: அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “குரங்கு அம்மை நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இருக்கிற நான்கு பன்னாட்டு விமான நிலையங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. எல்லா விமான நிலையங்களிலும் ஸ்கேனிங் சிஸ்டம் சென்று சொல்லக்கூடிய வெளிநாட்டுப் பயணிகளின் வெப்பத்தை அளவிடுகிற கருவிகளின் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 58-லிருந்து 64 பன்னாட்டு விமானங்கள் வருகிறது. இதில் சராசரியாக 11,850 சர்வதேச பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் குரங்கம்மை மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே வெளியே அனுப்பப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் நிலவரம்: இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு என்பது 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும் இறப்பு என்பது 4 என்ற எண்ணிக்கையிலேயே உள்ளது. அந்த நான்கு பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்துள்ளது.
இன்னும் அடுத்துவர இருக்கின்ற நான்கு மாதங்களில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் எல்லாத் துறைகளும் ஒருங்கிணைத்து இதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மாரடைப்பு வருவதை 10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கும் அறிகுறிகள்...உஷார் மக்களே!