கரூர்: கரூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று (ஏப்ரல்.19) 1,670 வாக்குப்பதிவு மையங்களில், காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அமைதியாக முறையில் நடைபெற்றது.
வாக்குப்பதிவு பணியில் 9,073 அரசு அலுவலர்கள் மற்றும் 1,839 காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவிற்காக 8,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2,000 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,167 வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.
கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கரூர் சட்டமன்றத் தொகுதியில், 269 வாக்குச்சாவடிகளில் 80.91 சதவீத வாக்குப்பதிவும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளில் 82.66 சதவீத வாக்குப்பதிவும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 253 வாக்குச்சாவடிகளில் 78.84 சதவீத வாக்குப்பதிவும்,
மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் 324 வாக்குச்சாவடிகளில் 75.97 சதவீத வாக்குப்பதிவும், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் 255 வாக்குச்சாவடிகளில் 80.49 சதவீத வாக்குப்பதிவும் மற்றும் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளில் 74.43 சதவீத வாக்குப்பதிவும் என மொத்தம் 1,670 வாக்குச்சாவடிகளில் 78.61 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் (மாவட்ட ஆட்சித்தலைவர்) மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1,670 வாக்குச் சாவடி மையங்களிலிருந்து மின்னணு வாக்குப்பெட்டி இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே உள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு அனுப்பும் பணி நடைபெற்று.
இப்பணிகள், இன்று ஏப்ரல் (சனிக்கிழமை) காலை நிறைவு பெற்று, வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் முன்னிலையில், அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை, சிசிடிவி கண்காணிப்புடன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் பணி முடிந்து திரும்பிய போது சோகம்! போலீசார் பயணித்த பேருந்து விபத்து! 21 பேர் காயம்! - MP Police Bus Accident