தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் வங்கதேசத்தில் ஏற்பட்ட போராட்டத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்களை பாதுகாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியில் வரவேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் மண்டல தலைவர் வெங்கடேஸ்வரன்,மாநிலச் செயலாளர் லக்ஷ்மண நாராயணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "ஆலயங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியில் வரவேண்டும்.
இந்து கோயில்களை மட்டும் அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது, இது நாட்டுக்கு நியாயம் இல்லை என்றும் தமிழக கிறிஸ்தவ ஆலய பராமரிப்புகள் மானியம் நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது நிதி உதவி வழங்குவதை திரும்ப பெற வேண்டும்.
பொது பணத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், பராமரிக்கப்படாத இந்து கோயில்களுக்கும் தொகையை தமிழ்நாடு அரசு செலவிடவும் நீதிமன்றத்தை நாட உள்ளது என்று கூறினர். மேலும் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் மீது சிபிஐ எடுத்துள்ள விசாரணை நடவடிக்கை மாநில அரசாங்கத்திற்கு எதிராக பேசுபவர்களின் குரல்வலையை நசுக்கும் செயலாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினர்.
தொடர்து பேசிய அவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிக்கை இந்து அடையாளங்களை மட்டுமே குறிவைத்துள்ளது. மற்ற மத அடையாளங்களைத் தடை செய்வது பற்றிப் பேசவில்லை.
இதனை செயல்படுத்த அரசு திட்டமிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்றனர். இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன், மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அடுத்த 3 மாதத்திற்கு பாஜக மாநில தலைவர் இவர் தான்? கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியது என்ன?