திருச்சி: திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையத்தில் சுமார் 50 ஏக்கர் நில பரப்பளவில் யானைகள் புத்துணர்வு முகாம் உள்ளது. இங்கு யானைகளைப் பராமரிப்பதற்காக 2019-ல் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எம்.ஆர்.பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டது. அனுமதியின்றி தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மீட்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் புத்துணர்வு முகாமில், 11 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகள் முகாமில் வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில், வனத்துறை சார்பில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடைக் காலம் துவங்கியதில் இருந்து திருச்சியில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது.
சுமார் 104 டிகிரி வரை வெப்ப நிலை பதிவாகியுள்ளதால், வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால், திருச்சி மாவட்ட வனத்துறையினர் முகாமில் உள்ள யானைகளை பராமரிக்க பிரத்யேக ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றனர். அதன்படி, இங்குள்ள யானைகளுக்கு தினமும் பசுந் தீவனத்துடன் குளிர்ச்சியான தர்பூசணி பழங்கள் மற்றும் இதர உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழங்கள் யானைகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன.
மேலும், யானைகள் ஓய்வு எடுக்கும் இடங்களில் உள்ள மண் தரையில் தண்ணீர் கலந்து சேறாக்கி, யானைகளை சேற்றுக் குளியல் செய்ய வைத்தும், பின்னர் ஷவரில் தண்ணீர் வரவழைத்து அதில் யானைகளை குளிக்க வைத்தும், அதிக வெப்ப தாக்கத்திலிருந்து யானைகளைப் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் தண்ணீரைக் கண்டதும் யானைகள் ஒன்றாக ஆனந்த குளியல் போடும் காட்சி காண்போர் மனதைப் பரவசமடையச் செய்கிறது.