விழுப்புரம்: வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அதேபோல், முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.ரவிக்குமார், மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு குப்பம், அனுமந்தை, ஆலம்பாக்கம், கந்தாடு, புதுப்பாக்கம், நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "இது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல, நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்று, நாட்டைக் காப்பாற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள். ஏனெனில், இந்தியாவின் பன்முகத்தன்மையை உறுதி செய்கிற அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க பாஜக முற்படுகிறது.
இனி பாஜக ஆட்சி அமைத்தால் அரசியலமைப்புச் சட்டத்திற்கே ஆபத்தாகும். நாட்டில் அதிபர் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள். எனவே, ஜனநாயகத்தை மீட்டு நமது உரிமைகளைக் காக்க பாசிச பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் போன்ற நலத்திட்டங்கள் இன்னும் அதிகமாக நமக்கு கிடைப்பதற்கு இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள். திமுக தலைமையிலான அரசு 1,000 ரூபாய் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை பொறுப்பேற்றதும் நிறைவேற்றியது.
அதேபோல், காங்கிரஸும் மகளிருக்கு வருடம் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக கூறியுள்ளது. உங்களுக்கு எல்லாம் வருடமும் 1 லட்சம் ரூபாய் கிடைத்திட காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்க வேண்டும். மேலும், காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால், இன்னும் பல நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட தமிழ்நாட்டில் 39 தொகுதியிலும் வெற்றி பெறச் செய்யுங்கள்.
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் விசிக வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கும் எனக்கு பானை சின்னத்தில் வாக்களியுங்கள். உங்களது வாக்குகளைச் சிதறாமல் பானை சின்னத்திற்கு அளித்து, ஒரு மிகப்பெரிய வெற்றியை தேடித் தாருங்கள். உங்கள் ஓட்டின் சக்தியை உணர்ந்து வாக்களித்து, ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துங்கள்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: சென்னையில் கனவு அலுவலகம் கட்டிய நயன்தாரா.. புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சி! - Nayantara New Office