சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது செங்கலத்துப்பாடி மலைக் கிராமம். இந்த மலைக் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இங்கு மொத்தமாக 363 வாக்காளர்கள் உள்ளனர். நீண்ட காலமாக தங்கள் கிராமத்திற்கு தனியாக மயானம் இல்லாததால், அந்தக் கிராமத்திற்கு மயான வசதி வேண்டும் என்று போராடி வந்துள்ளார்.
இந்த கிராம மக்களுக்கு பொது மயானம் வேண்டும் என்று கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது அரசு அதிகாரிகள் அந்தக் கிராமத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தித் தேர்தல் முடிந்ததும் தாங்காது கோரிக்கையை நிறைவேற்றுகிறோம் என்று கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு கிராம மக்கள் வாக்களித்தனர்.
ஆனால், அதன் பிறகு அவர்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால் கடந்த ஒரு மாதத்திற்கு முன் அக்கிராம மக்கள் ஏற்காடு காவல் ஆய்வாளர், தாசில்தார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆகியோருக்கு மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த மனுவில், "குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த நாங்கள் தலைமுறை தலைமுறையாக செங்கலத்துப்பாடி மலைக் கிராமத்தில் வசித்து வருகிறோம். ஆனால், எங்கள் கிராம மக்களுக்கு பொது மயானம் இல்லை. அதனால் எங்கள் ஊர் பொதுமக்களுக்கு பொது மயானம் ஒதுக்கித் தரக்கோரி அனைத்து தரப்பு அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பல விண்ணப்பங்கள் கொடுத்தும் நேரடியாகக் கேட்டும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினோம். அப்போது, வட்டாட்சியர் ஆர்.டி.ஓ எங்கள் கிராமத்திற்கு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, மயானத்திற்கு 1 ஏக்கர் 5 சென்ட் நிலத்தை அரசிடம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்து இடம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், அந்த இடத்தை தனியார் தோட்ட முதலாளி வேலி அமைத்து மறைத்துள்ளார். இது சம்பந்தமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம மக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம்" என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில், அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த மார்ச் 13 அன்று காலை 8 மணிக்கு செங்கலத்துப்பாடி கிராம மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் கருப்புக் கொடியேற்றி ஊர் மத்தியில் உள்ள வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஏற்காடு போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தங்கள் கிராமத்திற்கு நேரில் வந்து எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூறினர். அப்போது அங்கு வந்த ஏற்காடு தாசில்தார் ரமேஷ்குமார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த பேச்சுவார்த்தையில், தாசில்தார் ரமேஷ்குமார் சில நாட்களில் அந்த வேலியை அகற்றி விடுவதாகவும், இன்னும் இரண்டு மாதத்தில் தனியார் தோட்ட முதலாளியிடம் இருந்து சட்டப்படி அந்த நிலத்தை மீட்டு, மயானம் அமைத்து தருவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
ஆனால் தாசில்தார் உறுதியளித்தபடி, தனியார் தோட்ட முதலாளி அமைத்த வேலியை அகற்றித் தராததால் இன்று (ஏப்.19) கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி ஒருவர் கூட தேர்தலில் தங்களது வாக்கைப் பதிவு செய்யாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரிகளும் வராதது எங்களுக்கு வேதனை அளிக்கிறது என்றும், எந்த அதிகாரிகளும் மலைக்கிராம மக்களாகிய எங்களையும், எங்கள் உணர்வுகளையும் மதிக்கவில்லை என்றும் செங்கலத்துப்பாடி மலைக்கிராம மக்கள் கூறியுள்ளனர்.
மேலும், தங்களிடம் அரசு அதிகாரிகள் நேரில் வந்து, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தால் நாங்கள் ஓட்டுப் போடுவோம் என்றும் யாரும் வரவில்லை என்றால் இந்தத் தேர்தலை முழுவதுமாக புறக்கணிப்போம் என்றும் கூறியுள்ளனர். இதன் காரணமாக அங்குள்ள வாக்குப் பதிவு மையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதுமட்டும் அல்லாது, அந்த வாக்குச்சாவடியில் உள்ள 363 வாக்குகளில் ஒரே ஒரு வாக்கு மட்டும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாக்களிக்க வந்து ஏமாற்றமடைந்த தேனி வாக்காளர்கள்.. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனச் சாலை மறியல்!