மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையத்தில் அமைந்துள்ள தனியார் பெண்கள் விடுதியில் இன்று காலை குளிர்சாதன பெட்டி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதில், இரண்டு பெண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் மணிமொழி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "எனது பெயர் மணிமொழி. சொந்த ஊர் மதுரை என்றாலும் படித்தது வளர்ந்தது எல்லாம் தருமபுரி மாவட்டத்தில் தான். எனது கணவர் இறந்ததற்கு பிறகு நான் மதுரைக்கு வந்து விட்டேன். எனது ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்த பிறகு நான் இந்த விடுதியில் வந்து தங்கினேன்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4.45 மணி அளவில் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது வழக்கமான பவர் கட் என்று நினைத்து நான் உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது நாங்கள் தங்கியிருந்த இரண்டாம் தளத்தில் இருந்து பெண்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
அதற்குள் இரண்டு தளங்களிலும் புகை பரவியது. இந்த நேரத்தில் நிறைய பேர் வெளியே ஓடி விட்டனர். எங்களுக்கு மூச்சுமுட்ட தொடங்கியது. பெரும்பாலும் வயதான பெண்கள் என்பதால் எங்களால் ஓட முடியவில்லை. ஆகையால் மெதுவாக படியேறி மூன்றாவது தளத்திற்கு நாங்கள் சென்று விட்டோம்.
என்னோடு வந்த நான்கு பேர் அங்கு மேலே பாதுகாப்பாக இருந்தோம். பிறகு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயணைத்த பிறகு எங்களை பாதுகாப்பாக மீட்டனர். எங்களது உடைமைகள் அனைத்தும் அங்கே உள்ளன. அவற்றையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு நாங்கள் வந்து விட்டோம்.
எங்கள் விடுதியில் அட்வான்ஸாக வாடகை பணத்தை பெற்று விடுவார்கள். அதனை நாங்கள் முன்கூட்டியே அவர்களிடம் வழங்கி விட்டோம். அந்த வாடகை பணத்தை மீட்டு தர வேண்டும். எங்களது உடைமைகளை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதையும் படிங்க: பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி - விடுதி உரிமையாளர் கைது! - Fire accident in Madurai
தற்போது நாங்கள் தங்கியுள்ள இந்த விடுதியை போன்று பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட நிறைய விடுதிகள் உள்ளன. அந்த விடுதியில் உட்புறம் அவ்வப்போது சுவர் பெயர்ந்து விழுவது வழக்கம். மதுரையின் மையப்பகுதியில் போக்குவரத்திற்கு வசதியாக இந்த விடுதி அமைந்திருப்பதால் பெரும்பாலான பெண்கள் இதனை தேர்ந்தெடுத்து தங்கி விட்டனர். இந்த கட்டடத்தில் சுவர் மட்டுமன்றி மின் இணைப்புகளும் மிகப் பழமையானவை.
இந்த விடுதியில் தங்குவதற்கு மாத வாடகை உணவுடன் ரூ.5000. உணவு தேவை இல்லை என்றால் ரூ.3000. மாணவிகளுக்கு மட்டும் ரூ.4000 கட்டணமாக விதிக்கின்றனர். இந்த விபத்தில் இறந்து போன ஆசிரியர் பரிமளா 20 ஆண்டுகளாக இங்கே தங்கி உள்ளார். இறந்து போன சரண்யா 10 நாட்களுக்கு முன்புதான் இந்த விடுதியில் சேர்ந்தார். தீ விபத்து ஏற்பட்ட முதல் தளத்தில் இவர்கள் இருவர் உள்பட 20 பேர் தங்கி இருந்தனர்.
இது போன்ற ஆபத்தான விடுதிகளில் தங்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை. ஆனால் போக்குவரத்து வசதி கருதி இன்று நாங்கள் தங்க வேண்டிய சூழ்நிலை. ஒரு வருடத்திற்கு முன்பு மதுரை மாநகராட்சி இந்த கட்டடத்தை எடுக்க சொல்லி நோட்டீஸ் விட்டும் கூட அவர்கள் அதனை செய்யவில்லை என்று இப்போதுதான் தெரிகிறது.
பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட இது போன்ற விடுதிகளை அரசு தடை செய்ய வேண்டும். தமிழக அரசு இதுபோன்ற விடுதிகளை கட்டி எங்களைப் போன்றவர்களை தங்க அனுமதிக்க வேண்டும். பிழைப்பிற்காகவும் படிப்பிற்காகவும் ஊர் விட்டு ஊர் வந்து இங்கே நிறைய பேர் தங்கி உள்ளனர். இன்று காலையில் இந்த பிள்ளைகள் எல்லாம் கதறி துடித்ததைப் பார்க்கும்போது, என்னால் தாங்க முடியவில்லை. வேதனையாக உள்ளது.
விடுதி வார்டனை எல்லோரும் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்தனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இந்த பரபரப்பு இரண்டு, மூன்று நாள்கள் தான் நீடிக்கும். அதற்கு பிறகு எப்போதும் போல வழக்கமாகி விடக்கூடாது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்" என்றார்.