அரியலூர்: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட 22 வேட்பாளர்கள் 27 மனுக்களை அளித்திருந்த நிலையில், வேட்பு மனு பரிசீலனையில் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியாக, தற்போது சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் 14 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், வேட்பாளர்களுக்கான சின்னம் வழங்கும் நிகழ்வு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆணி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று (மார்ச் 30) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் கலந்து கொண்டனர்.
திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தவர்களில் வேறு யாரும் பானை சின்னம் கேட்காததால், திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு இடங்களிலும் எங்களுக்கு பானை சின்னம் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, எங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரால் பானை சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை வழங்காமல் தொடர்ந்து நிராகரித்து வருவது, சங்பரிவார் அமைப்புகளின் கட்சி அலுவலகமாக தேர்தல் ஆணையம் செயல்படுவது போன்ற நிலையை உருவாக்கியுள்ளது.
பானை சின்னத்தைக் கேட்டு தாங்கள் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, மற்ற மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வலியுறுத்துவோம்” என்று கூறினார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு திருமாவளவன் செய்த 5 செயல்களை பட்டியலிட முடியுமா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் கூறியுள்ளது குறித்து கேட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் நிதிகளில் இருந்து கடந்த ஆண்டுகளில் அவர் செய்த சாலைகள், மேம்பாலங்கள், பள்ளிக் கட்டிடங்கள், பள்ளி மாணவர்களுக்கு இருக்கைகள், அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பல செயல்பாடுகளை வழங்கப்பட்ட நிதியுடன் பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு மூன்று மணி நேரம் அல்லது 5 மணி நேரம் காத்திருந்து பேச வேண்டிய நிலை தான் எதிர்கட்சிகளுக்கு உள்ளது. இருந்தாலும், நான் 69 மசோதாக்களில் விவாதம் செய்துள்ளேன். எதிர்கட்சியாக இருப்பதால், பாஜக அமைச்சர்களே எங்களை புறக்கணித்தும், நாங்கள் வைக்கும் கோரிக்கைகளை நிராகரிக்கும் நிலை தான் உள்ளது” என குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், “தற்போதைய தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரங்களில், மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருவதையும், மக்களின் ஆதரவு பெருகுவதையும் பார்க்கையில் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என கூறினார்.
இதையும் படிங்க: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு - VCK Candidates Got Pot Symbol