விழுப்புரம்: நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமலுக்கு கொண்டுவரப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், விழுப்புரம் கண்டன ஆர்ப்பாட்டம் கோட்டகுப்பம் நகராட்சி திடலில் வெள்ளிக்கிழமையன்று நடைபற்றது. இதில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உட்பட விசிகவினர் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இரண்டு தனி தொகுதி மற்றும் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்ப்பில் ஆரம்பத்தில் இருந்தே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கடந்த ஆண்டை போலவே விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி நேற்று பிற்பகல் 3:20 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போது சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிட்ட நிலையில், மீண்டும் அவர்கள் இருவரே போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தற்போது வரை முடிந்துள்ளது.
அதன்படி, கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளன.
அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடந்தமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவன் 'பானை' சின்னத்திலும், விழுப்புரத்தில் தொகுதியில் ரவிக்குமார் 'உதயசூரியன்' சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர்.
மேலும், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விழுப்புரத்தில் போட்டியிடப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு கிளம்பியது ஏற்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் தொகுதியில் மீண்டும் தானே போட்டியிட உள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'புதுச்சேரியில் வேட்பாளர்களிடம் ரூ.50 கோடி லஞ்சம் கேட்ட பாஜக' - நாராயணசாமி குற்றச்சாட்டு