சென்னை: ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரகப் பகுதியில் 4 முதல் 5 வயதுள்ள மற்றும் 8 முதல் 9 வயதுள்ள 2 ஆண் புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளதாக ஓசூர் வன உயிரினக் காப்பாளர் காா்த்திகாயினி தெரிவித்ததாக தலைமை வன உயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரகப் பகுதியில், கடந்த ஜனவரி மாதம் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது அந்தக் கேமராக்களில் 2 புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளது தெரிய வந்துள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2 புலிகள் தென்பட்டது வனத்துறை மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தாகக் கருதப்படுகிறது. மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து புலிகள் இங்கு வசிக்க உகந்த வனப்பகுதியாக மாற, தமிழ்நாடு அரசு வன உயிரினங்களைப் பாதுகாக்க எடுத்து வரும் நடவடிக்கைகளே இதற்கு முக்கிய காரணமாகும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், இந்தப் பகுதியில் 50 ஆண்டுகளாக புலியின் நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது புலிகள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வனஉயிர் ஆர்வலர் வனம் எஸ்.சந்திரசேகர் கூறுகையில், "புலிகள் என்பது ஒரு தனித்துவமான விலங்கு. இவை எல்லாப் பகுதிகளிலும் வாழ முடியாது. ஒரு வளமான காட்டில் மட்டுமே அவை வாழக்கூடும்.
குறிப்பாக முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை போன்ற வனப்பகுதிகள் புலிகளின் காப்பக காடுகளாக உள்ளன. தற்போது, காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரகப் பகுதியில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2 புலிகள் தென்பட்டுள்ளது. இது அந்தப் பகுதியிலுள்ள காடு வளமாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால், வனத்துறை தொடர்ந்து புலிகளையும், மற்ற விலங்களையும் பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, காவல்துறை போல் வனத்துறையிலும் உட்துறைகளான மோப்ப நாய் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு, புலன் விசாரணை போன்ற உட்பிரிவில் வனத்துறை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். பவேரியா வேட்டை கும்பலால் தமிழ்நாட்டில் வனவிலங்கு வேட்டை அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும், புலிகளை பாதுகாத்தாலே காடுகளை பாதுகாக்க முடியும். ஒரு காட்டிற்கு யானையும், புலிகளும் முக்கியமானவை. யானைகள் தாவர வகைகளை பெருக்கும், புலி பல்லுயிர்கள் இருக்கும் காடுகளில் மட்டுமே வாழக்கூடியவை. அதனால், வனத்துறை இன்னும் அதிகளவில் செயல்பட்டால், தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “கள்ளைக் குடிக்கும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” - அண்ணாமலை