சென்னை: தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்களை எளிதில் அடிமைக்குள்ளாக்கும் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீசார் மிகத் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், சென்னையில் பல இடங்களில் கஞ்சா புழக்கம் இருந்து வருவதும், இளம் சமூகத்தினர் அதற்கு அடிமையாகி ஒழுக்கக்கேடான காரியங்களில் ஈடுபடுவதும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், சென்னை எண்ணூர் அருகே கஞ்சா போதையில் அராஜகம் செய்து வந்தவர்களைக் கண்டித்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
எண்ணூர் மூதாட்டி கொலை: சென்னை எண்ணூரில் உள்ள சத்தியவாணி முத்து நகரில் வசித்து வந்தவர், பாக்கியம் (65). அந்த பகுதியில் கஞ்சா போதையில் அராஜகம் செய்து கொண்டிருந்த இளைஞர்களை பாக்கியம் கண்டித்ததாக தெரிகிறது.
அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்து, பாக்கியத்தை கத்தியால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பாக்கியம்மாள், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த எண்ணூர் போலீசார், பாக்கியம்மாளின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாக்கியம்மாளை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அஜய் (24) மற்றும் விக்ரம் (24) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.