வேலூர்: ரயிலில் கஞ்சா கடத்திச் செல்பவரைக் கைது செய்ய ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காட்பாடி ரயில் நிலைய காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையிலான காவலர்கள் ரயில் நிலையத்தின் நடைமேடைகள் மற்றும் ரயில்களில் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்போது, 3-வது நடைமேடையில் ஹட்டியாவில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற ரயில் வந்துள்ளது. காவல் ஆய்வாளர்கள் ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது ரயிலின் எஸ்-5 பெட்டியில் சோதனை செய்தபோது கழிப்பறை ஓரம் சந்தேகத்திற்கிடமான இரண்டு பேர் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் போலீசார் அவர்கள் வைத்திருந்த 5 பெரிய பைகளைச் சோதனையிட்டனர். அதில், 18 பொட்டலங்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு பேரைப் பிடித்து விசாரித்த போது கேரளாவைச் சேர்ந்த விகாஸ் பாரதி (32) மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவி ராஜ் வனிஷ் (28) என்பது தெரியவந்துள்ளது.
18 பொட்டலங்களில் சுமார் 36 கிலோ கஞ்சா இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து 36 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு நபர்களை வேலூர் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தேனியில் ஆட்டோ மீது கார் மோதி விபத்து.. 2 பேர் பலி - ஓடி வந்து உதவிய ஓ.பி.ரவீந்திரநாத்!