சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தேனியில் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சென்னையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது மூன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுவரை 7 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகச் சவுக்கு சங்கர் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கஞ்சா, பணம், லேப்டாப் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து, அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெலிக்ஸ் ஜெரால்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமீன் வழங்க மனு அளித்திருந்தார். ஆனால் மனு மீதான விசாரணையின் போது பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன்ஜாமீன் எதுவும் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தனர்.
இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் வைத்து பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து ரயில் நிலையத்திலிருந்து காவல்துறை வாகனம் மூலம் உரிய பாதுகாப்புடன் விசாரணைக்காகத் திருச்சி மாவட்டம் அழைத்துச் செல்வதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கோவையில் பதிவு செய்த வழக்கு தொடர்பாக அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதால், அங்கும் விசாரணைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் விவகாரம்: "எனது கணவரை மீட்டு தாருங்கள்" யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி மனு! - Felix Gerald