சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ''மேட்டூரில் இருந்து திருப்பதிக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேட்டூரில் இருந்து திருப்பதிக்கு பேருந்து இயக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.
மேட்டூர் டு திருப்பதி: இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ''சேலம் மாவட்ட தலைநகரில் இருந்து திருப்பதிக்கு பேருந்து சேவை போதுமான அளவுக்கு இயக்கப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ., சதாசிவம் பெருமாளுக்கு மேட்டூரில் இருந்து பேருந்து சேவை கேட்கிறார். ஆய்வு செய்து இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார். இதற்கு அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதேபோல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பாபு, ''கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க அரசு முன்வருமா'' என்று கேள்வி எழுப்பினார்.
கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தனி நல வாரியம்: இதற்கு பதில் அளித்த தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ''கலைஞர் கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் 2017 ஆம் ஆண்டில் கேபிள் டிவி நல வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தார். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கேபிள் ஆபரேட்டர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நல வாரியம் முடக்கி வைக்கப்பட்டிருந்தது''என கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பிடிஆர் ''திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியம் மறு சீரமைப்பு செய்யப்பட்டு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்மூலம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பல்வேறு அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது''.
''அரசு கேபிள் டிவியில் நிர்வாக குளறுபடிகளை திருத்தி இரண்டு மாதத்திற்கு எச்டி பாக்ஸ் வழங்கப்படும் என்றும் 2 மாதத்திற்க்குள் குறைந்த செலவில் அரசு கேபிள் டிவியின் மூலம் எச்டி சேவை வழங்கப்படும்'' என்றார்.
இதையும் படிங்க: நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிக்கான செயல்பாட்டு அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா?