சென்னை: யூடியூப் மூலம் பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்கள் திரட்டியும், ஆட் சேர்ப்பு கூட்டங்களை நடத்தி மூளைச்சலவை செய்தும் இஸ்பு உத் தஹிரீர் என்ற அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கடந்த மே மாதம் ராயப்பேட்டையைச் சேர்ந்த தந்தை மகன்கள் 3 பேர் உட்பட மொத்தம் 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி ஆகிய 6 நபர்களை ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி முதல் முறையாக 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது அதே 6 நபர்களை இரண்டாவது முறையாகத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
ஊறுகாய் பாக்கெட் இல்லாததால் கடைக்காரர் மீது தாக்குதல்: சென்னை கோடம்பாக்கம் காமராஜ் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் அசாருதீன் மற்றும் முகமத் உசேன். இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த கலையரசன், வினோத் உள்ளிட்டோர் ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் கேட்டதாகவும், ஆனால் ஒரு ரூபாய் பாக்கெட் இல்லை எனவும், ஐந்து ரூபாய் ஊறுகாய் பாக்கெட் மட்டுமே இருப்பதாகக் கடையில் இருந்தவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் சாம்சங் தொழிலாளர்கள் சென்ற வேன் விபத்து.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
அதனால் வினோத்திற்கும், மளிகை கடைக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மளிகை கடைக்காரர் அசாருதீன் என்பவரை வினோத் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அசாருதீன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள வினோத் மற்றும் கலையரசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்