சென்னை: நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று நடந்த போக்குவரத்துத்துறை மீதான மானியக் கோரிக்கை கூட்டத்தொடரில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரசு பணிமனைகளை நவீன மயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள கொள்கை குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில், "2022 - 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023 - 2024ஆம் நிதியாண்டில் சம்பளம், தொழிலாளர் வைப்பு நிதி, பணிக்கொடை மற்றும் எரிபொருள் செலவு போன்ற நிர்வாக செலவுகள் மாறாமல் உள்ளது. இருப்பினும், கரோனா பெருந்தொற்றின் விளைவாக ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையினால், குறிப்பாக சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை வழங்குவதற்காக வாங்கிய கடன்களுக்கான வட்டியுடன் கூடிய செலவினம் சிறிது அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் (TDFC) வழங்கும் நிதி உதவி:
தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் என்பது தமிழ்நாடு அரசின் ஒரு நிறுவனமாகும். பொதுமக்கள், அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து வைப்புத் தொகையை திரட்டுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
வைப்பீட்டாளர்களுக்கு வட்டியை வழங்குவதற்கும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளை நிலை நிறுத்துவதற்கும் இந்த வைப்புத்தொகைகள் அரசு போக்குவரத்துக் கொடுக்கப்படுகின்றன. கழகங்களுக்கு கடனாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பாட்டு, மூலதனத்திற்கு நியாயமான வட்டி விகிதத்தில் எளிதாகக் கடன் பெற முடிகிறது.
2023ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இந்நிறுவனம் செயல்பட்டது. தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் ஆகியவற்றின் நிர்வாகசெயல்பாட்டினை மேம்படுத்திட 2023ஆம் ஆண்டு நிதித் துறைக்கு இந்நிறுவனம் மாற்றப்பட்டது. மாற்றத்திற்கு பின்னரும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தொடர்ந்து கடன் உதவி வழங்கி வருகிறது.
மேலும் மார்ச் 31 ஆம் தேதி (31.03.2024) உள்ளவாறு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மொத்தக் கடன்கள் ரூ.18,178.81 கோடியாகும். அதன்படி வாகன கொள்முதல் கடன் ரூ.589.76 கோடியும், குறுகிய கால கடன் ரூ.5,981.82 கோடியும், நடைமுறை மூலதனத்திற்கான பருவக் கடன் ரூ.11,607.23 கோடி என மொத்தம் ரூ.18,178.81 கோடி கடனில் உள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கியுள்ள நிதியுதவி விவரம்:
வ.எண் | வருடம் | கடன் தொகை (கோடியில்) |
1. | 2014 - 2015 | 2,151.24 |
2. | 2015 - 2016 | 2,776.33 |
3. | 2016 - 2017 | 3,574.32 |
4. | 2017-2018 | 3,757.58 |
5. | 2018-2019 | 3,445.75 |
6. | 2019-2020 | 6,190.11 |
7. | 2020-2021 | 7,725.25 |
8. | 2021-2022 | 10,786.33 |
9. | 2022-2023 | 12,573.33 |
10. | 2023-2024 | 14,237.14 |
மேலும், கரோனா பெருந்தொற்றினால் கழகங்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க வேண்டியதன் அவசியத்தால், 2021 - 2022ஆம் ஆண்டு முழுவதும் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் கடன்களின் அளவு அதிகரித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
தற்போது, இவ்வகையாக தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திடம் நிதியைப் பெற்றே போக்குவரத்துறையை நடத்தி வருவது இந்த குறிப்பின் மூலம் தெரிய வருகிறது.