மதுரை: தமிழ்நாடு காவல்துறையினருக்கான 2024ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் கடந்த செப்டம்பர் 26 முதல் 28ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டம் ஒட்டிவாக்கம் பகுதியில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றன. இந்த போட்டியில் பல்வேறு மண்டலங்களாக காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
இதில் ரைபிள் ஷூட்டிங் (Rifle Shooting), கார்பைன் கன் ஷூட்டிங் (Carbine Gun Shooting), பிஸ்டல் மற்றும் ரிவால்வர் ஷூட்டிங் (Pistol and Revolver shooting) ஆகியவை ஆண், பெண் காவலர்களுக்கென தனித்தனியாக நடைபெற்றது. இதில் தென்மண்டல துப்பாக்கி சுடும் ஆண்கள் அணி சார்பாக ரைபிள் ஷூட்டிங் பிரிவில் ஒரு தங்கம், இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்றது.
மேலும் கார்பைன் கன் ஷூட்டிங் பிரிவில் ஒரு தங்கம் ஒரு வெள்ளி 2ஆம் இடத்துக்கான கேடயமும், பிஸ்டல் மற்றும் ரிவால்வர் ஷூட்டிங் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் 7 பதக்கங்களையும் இரண்டு கேடயங்களையும் வென்றுள்ளது.
இதையும் படிங்க: கோவை அதிமுக கவுன்சிலரை சஸ்பெண்ட் செய்த மேயரின் உத்தரவு ரத்து!
தனது சிறப்பான பங்கேற்பின் மூலமாக தென் மண்டல அணி இந்த வெற்றியை ஈட்டி உள்ளதாக மதுரை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) தென்மண்டல துப்பாக்கி சுடும் பிரிவில், மதுரை மாநகர காவல்துறை சார்பாக பங்கேற்ற காவலர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் கேடயங்களுடன் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.