சென்னை: சட்டத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், "வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும், வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும். காலியாக உள்ள மாவட்ட நீதிபதிகள் பணியிடங்கள் விரைவில் நிரப்ப வேண்டும். உச்சநீதிமன்ற கிளை தமிழகத்திற்கு வேண்டும்" என கோரிக்கை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "குடும்ப வன்முறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும், பெண்களை போலவே ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்" என்றார். "100 வழக்குகள் வந்தால் அவற்றில் 75 பேர் ஆண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்" என்று அவர் கூறினார்.
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கோரிக்கைகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "வழக்கறிஞர்கள் புகார் அளித்தால் முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் கிளை தமிழகத்திற்கு கொண்டுவர முதலமைச்சர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசு சார்பில் முயற்சி செய்யப்பட்டு வருகிறது.
குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் அதிக அளவில் பெண்கள் தான் புகார் அளிக்கிறார்கள். ஆண்கள் ஒருவர் கூட பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்கவில்லை" என்றார்.
இதனிடையே, "சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம்" என சபாநாயகர் அப்பாவு நகைச்சுவையாக கூறியதை அடுத்து, அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ.வை 'லெப்ட் ரைட்' வாங்கிய அவை முன்னவர் துரைமுருகன்!