கோயம்புத்தூர்: நிலை மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அடுத்தகட்டமாக என்ன செய்வது என்ற ஆலோசனைக் கூட்டம், கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ-இந்தியா வளாகத்தில் நடைபெற்றது.
அதில், அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த தொழிற்துறை நிர்வாகிகள் கலந்து கொண்டு, அவர்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். குறிப்பாக நிலை மின் கட்டணம் குறித்து விவாதிக்கப்பட்டது. சிலர் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசை மிகக் கடுமையாகச் சாடினர். அப்போது பேசிய ஒருவர், "ஆசிரியர்கள் ஏதேனும் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினால், உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் தான், தேர்தல் மையங்களில் பணியாற்றுகின்றனர்.
ஆனால் தங்கள் துறையைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது எனத் தெரிவித்தார். தொடர்ந்து இந்த கூட்டத்தின் நிறைவில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நிலை மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணக் குறைப்புகளை அரசு அறிவிக்கவில்லை என்றால், தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டம் நடத்தப்படும். அதில், பெரும்பான்மையான அமைப்புகள் என்ன முடிவு எடுக்கிறதோ அதைக் கேட்பது அல்லது 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என இரண்டில் ஒரு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில், "எங்களுடைய நிலை மின் கட்டணம் சம்பந்தமான பிரச்சனைக்கு அரசு இது நாள்வரை செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் எங்களுடைய பிரதானப் பிரச்சனையான நிலை மின் கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
தேர்தலுக்கு முன்பு தமிழக அரசு எங்களுடைய இந்த கோரிக்கையைப் புறக்கணிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரதிநிதிகளை அழைத்துத் தேர்தல் புறக்கணிப்பு சம்பந்தமாகவும் அல்லது 40 தொகுதிகளிலும் தொழில் முனைவோர்களை வேட்பாளர்களாக நிறுத்துவது சம்பந்தமாகவும் ஒரு கூட்டம் நடத்தி, அதில் முடிவெடுக்க இருக்கிறோம்.
மேலும் எங்களுடைய 5ம் கட்ட போராட்டத்தின் பொழுது, அரசு தங்களை அழைத்துப் பேசி எங்களுடைய 50 சதவிகித கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளனர். இன்னும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். முக்கியமாக நிலை மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
430 சதவிகிதம் பயன்படுத்தப்படாத மின்சாரத்திற்கு மாதம்தோறும் கட்டணம் வசூலிப்பது சரி இல்லை என்று அமைச்சர்களே ஒப்புக் கொண்டிருந்தாலும், மின்சார வாரியத்தின் தலைமை அதிகாரி ராஜேஷ் லக்கானி தமிழ்நாட்டில் உள்ள குறு மற்றும் சிறு தொழில்களைக் கண்டாலே வெறுப்பது போல் அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயின் தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலி..! எப்போது அறிமுகம்?