ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (பிப்.4) அனுமதி சீட்டைப் பெற்று, மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு திடீரென ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளையும், அதிலிருந்து 23 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதனை அடுத்து, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும், அவர்களது விசைப் படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (பிப்.5) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை அரசு சிறைபிடித்து வைத்துள்ள 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த மீனவ சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீனவர்கள் தேர்தலை புறக்கணித்து, தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய தூதரக ஊழியர் கைது!