சென்னை: தேசிய பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இதுவரை 21 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள நிலையில், பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகனும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞரணி நிர்வாகியுமான அஸ்வத்தாமன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் என்கவுண்டர் செய்யப்பாட்டார். இதையடுத்து கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, அருள், ராமு, சிவசக்தி, ஹரிஹரன் ஆகிய ஐந்து நபர்களை மூன்றாவது முறையாக செம்பியம் தனிப்படை போலீசார் காவலில் எடுத்த்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொலையில் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் என்பவர்க்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இரண்டு நாட்கள் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இன்று அஸ்வத்தாமன் செம்பியம் தனிபடை போலீசாரார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிரடி திருப்பம்: மேலும், விசாரணையில் அஸ்வத்தாமன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருவது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொழிலதிபர் ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சிறைக்குச் சென்று வந்தவர் என்பதும் இவர் சிறைக்குச் செல்ல ஆம்ஸ்ட்ராங் தான் மூளை காரணமாக செயல்பட்டார் என்பதால் இருவரிடையே முன் விரோதம் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் பொன்னை பாலு, அருள் உள்ளிட்ட நபர்கள் இந்த கொலை திட்டத்திற்கு அரக்கோணம், வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் திட்டம் தீட்டிய போது அந்த கூட்டத்தில் அஸ்வத்தாமனும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அஸ்வத்தாமனிடம் விசாரணை நடத்தி அவரும் இந்த கொலையில் தொடர்புடையவர் என்பதை உறுதி செய்யப்பட்ட பின்பு கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கறிஞர்கள் தலைவர் தேர்தலில் அஸ்வத்தாமன் தலைவர் பதவிக்கு போட்டிட்டபோது அதற்கு ஆம்ஸ்ட்ராங் இடைஞ்சலாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் இருவருக்கும் முன் விரோதம் இருந்துவந்ததாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை செம்பியம் தனிபடை போலீசார் தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸில் இருந்து நீக்கம்: விசாரணைக்கு பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்