சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் @DrSJaishankar அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் கடிதம்.#TNDIPR pic.twitter.com/l8qQcDA3Rr
— TN DIPR (@TNDIPRNEWS) July 11, 2024
அக்கடிதத்தில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள் (IND-TN-08-MM-364, IND-TN-16-MM-2043, IND-TN-08-MM-1478) கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (ஜூலை 11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீன்பிடித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நம் நாட்டு மீனவர்கள், வரலாறு காணாத நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். தற்போது 173 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர். மீனவர்கள் இதுபோன்று சிறைபிடிக்கப்படுவது. மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதோடு அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட வேண்டும். மேலும், இதுதொடர்பாக உரிய தூதரக நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்" என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை! மீண்டும் அட்டூழியம்..