சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று(பிப்.22) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் எப்போது திறக்கப்படும் எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதலமைசர் மு.க.ஸ்டாலின், "நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன் கருனாநிதியின் நினைவிடப் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும், அருகிலுள்ள அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு நினைவிடங்களும் வருகின்ற 26ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறக்கப்படும்.
இந்த நிகழ்வை விழாவாகக் கொண்டாட விரும்பவில்லை. இருந்த போதிலும், உறுப்பினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த தகவலை இங்கு பகிர்கிறேன். மேலும் இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும், இந்த பேரவை நிகழ்வின் மூலமாகவும், தமிழக மக்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் இதன் மூலமாக அழைப்பு விடுக்கிறேன்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் உறுப்பினர் எழிலன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.
பின்னர், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், வள்ளுவர் கோட்டத்தின் புனரமைக்கும் பணி எப்போது முடிவடையும்? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "வள்ளுவர் கோட்டம் அமைப்பதற்காக கடந்த 1974ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின், கடந்த 1976ஆம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
மேலும், சுமார் 5 ஏக்கர் நில பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டடக்கலையுடன் வள்ளுவர் கோட்டம் தப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், கல் தேர் 128 அடி உயரம் கொண்டதாகவும், 67 மீட்டர் நீலம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டம் பாழடைந்து இருந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் வள்ளுவர் கோட்டத்தினை புனரமைக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலையரங்கம், மாற்றுத்திறனாளிகள் நடைபாதை, உணவுக்கூடம், விற்பனைக் கூடம், மழை நீர் சேகரிப்பு வசதி, ஒலி ஒளி காட்சி கூடம், நுழைவுவாயில் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் 30.06.2025ஆம் ஆண்டு முடிக்க வேண்டும். ஆனால் முன்னதாகவே பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என உறுதியளித்தார்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் எழிலன், ஆகம விதிகளைத் தளர்த்தி அனைவரும் கருவறைக்கு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தில், வள்ளுவரையும் திருக்குறளையும் ஆய்வு செய்யும் விதமாக சர்வதேச வள்ளுவர் ஆய்வுகள் (International valluvar studies) என்று ஆய்வு அமைப்பு வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, இதுகுறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காதலி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த காதலன்.. தஞ்சையில் நிகழ்ந்த பகீர் சம்பவம்!