கோயம்புத்தூர்: நடப்பாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் அரசு பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவது போல, மாணவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் 'தமிழ்ப்புதல்வன் திட்டம்' (Tamil Pudhalvan Scheme) இன்று முதலமைச்சரால் கோவையில் உள்ள கல்லூரியில் துவக்கி வைக்கப்பட்டது.
அந்த வகையில் கோவையில் நடந்த அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை விமானம் மூலம் வந்தடைந்தார். தொடர்ந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த ஸ்டாலினுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை, துவக்கி வைத்தார்.
பின்னர், அத்திட்டத்தினால் பயன்பெறும் மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் டெபிட் கார்டுகளை வழங்கினார். தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
முன்னதாக நிகழ்ச்சி மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நேற்று இரவே உங்களது வங்கி கணக்கிற்கு ரூ.1000 போட உத்தரவிட்டுவிட்டேன். நாள்தோறும் ஏராளமான திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும், ஒரு சில திட்டங்கள் தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கும். வரலாற்றில் பெயர் சொல்லும் திட்டமாக இருக்கும். அப்படிப்பட்ட திட்டமாக 'தமிழ்ப்புதல்வன் திட்டத்தை' (Tamil Pudhalvan Scheme) துவக்கி வைக்க கோவைக்கு வந்துள்ளேன்.
இது அன்பான, பாசமான, சேவை மனப்பான்மை உள்ள மக்கள் வாழும் பகுதி. இந்த மண்டலம் தொழில் துறையில் சிறந்த மண்டலம். சிறந்த கல்வி நிலையங்கள் கொண்ட மண்டலம். பழமையும், புதுமையும் கலந்த இப்பகுதி மக்கள் பெரியவர்களை மதித்தல் மற்றும் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்குகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மக்களுக்கு பயனளிக்கும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். நாட்டிற்கே தமிழ்நாடு தான் முன்னோடி என்று சொல்லும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
பெண்கள், மாணவர்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை செய்கிறோம். புதுமைப் பெண் திட்டம் மூலம் 3.78 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. மாணவிகளுக்கு வழங்கப்படுவது போல மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென மாணவர்கள் கேட்டார்கள். அந்த கோரிக்கையை ஏற்று உருவாக்கப்பட்ட திட்டம் தான் தமிழ்ப் புதல்வன் திட்டம்.
யாரெல்லாம் பயனடையலாம்: அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி வரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையிலும், அரசு, அரசு உதவி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியில் படித்து கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் சார்ந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தினால் தொழில் கல்வி பயிலும் மாணவர்களும் பயன்பெறலாம்.
கல்வி கற்க எதுவும் தடையாக இருக்கக்கூடாது: கிட்டத்தட்ட 3.78 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், ரூ.380 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் மாணவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். உங்களின் குடும்பத்தில் ஒருவனாக தந்தையாக இருந்து இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன்.
கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கல்லூரி மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி மற்றும் கருத்தரங்க கூடம் கட்டி தரப்படும். 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் நிலையை உருவாக்க வேண்டும். மேலை நாடுகளுக்கு இணையான கட்டமைப்புகள் வர வேண்டும். பள்ளி படிப்பு முடித்த ஒரு மாணவரும், உயர்கல்வி படிக்காமல் திசை மாறி போய் விடக்கூடாது. நல்ல வேலை வாய்ப்பை பெற வேண்டும். இது தான் என் கனவு.
அதற்காக கடுமையாக உழைத்து பல புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளேன். உலக அளவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். கல்வி கற்க எதுவும் தடையாக இருக்கக்கூடாது. அந்த தடைகள் உடைத்தெறியப்பட வேண்டும். தடைகளை உடைக்க உதவி செய்ய நானும், திராவிட மாடல் அரசும் உள்ளது.
வினேஷ் போகத் தடைகளை உடைத்து அசாத்திய துணிச்சல் உள்ள பெண்ணாக நாம் எல்லோரும் பாராட்டும் வகையில் கொடி கட்டிப் பறந்து கொண்டுள்ளார். தடைகள் என்பது உடைத்தெறிய தான். தடையை பார்த்து சோர்ந்து, முடங்கி விடக்கூடாது. நான் உங்களது மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். உங்களது வெற்றிக்கு பின்னால் திராவிட மாடல் அரசு இருக்கும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: அமைச்சர் சேகர்பாபு கோயில்களை திமுக மயமாக்க முயற்சிக்கிறார் - எச்.ராஜா விமர்சனம்