திருவாரூர்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த துர்கா தேவி என்ற மாணவி 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
கொரடாச்சேரி அருகில் உள்ள பத்தூர் சிவன் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் துர்கா தேவி. இவருடைய தந்தை மெக்கானிக்காகவும், தாயார் சுதா இல்லத்தரசியாக உள்ளார். இவருடைய சகோதரர் மணிகண்டன் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயது முதலே படிப்பில் ஆர்வமாக இருந்து வந்துள்ள துர்கா தேவி 6 முதல் 10ம் வகுப்பு வரை கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்தநிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அவர், தமிழில் 96, ஆங்கிலத்தில் 100, கணிதத்தில் 98, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 98 என மொத்தம் 492 மதிப்பெண்கள் எடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக மதிப்பென் எடுத்தவர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.
இது குறித்து மாணவி துர்கா தேவி கூறுகையில், " நாங்கள் கூரை வீட்டில்தான் வசித்து வருகிறேன். எனது வீட்டில் இரண்டு வருடமாக மின்சார வசதி இல்லை. இருப்பினும் நான் செல்போன் டார்ச் விளக்கு வெளிச்சத்தில் தினமும் படிப்பேன். செல்போன் டார்ச் விளக்கு அணைந்து விட்டால் மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் 10ஆம் வகுப்பில் 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து உள்ளேன். இதற்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசியருக்கும், மற்ற வகுப்பாசிரியருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் வீட்டில் மின்சார வசதி கிடையாது. கடந்த 2 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல்தான் படித்துக் கொண்டு வருகிறேன். எங்கள் வீட்டிற்கு மின்சார வசதி பெறுவதற்குப் பணம் கட்டி மூன்று மின் கம்பங்கள் அமைக்க வேண்டி இருப்பதால், அதற்கான பொருளாதார வசதி எங்களிடம் இல்லை.
இருப்பினும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தின் விளைவாக இந்த மதிப்பெண்ணைப் பெற முடிந்ததது. என்னுடைய ஆசை என்பது நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக வேண்டும் என்பதுதான்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஹரா படம் உங்களை ஏமாற்றாது" - நடிகர் மோகன் சிறப்புப் பேட்டி!