திருவள்ளூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொறுத்தவரை, 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் பலரும் தங்கள் மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிரபுசங்கர் நேற்று (மார்ச் 16) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 83 ஆயிரத்து 710 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 70 ஆயிரத்து 279, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 12 ஆயிரத்து 702 மற்றும் மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் எண்ணிக்கை 729 பேர் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான 3,687 வாக்குச்சாவடிகளும், 1,301 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இவற்றில் 281 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் 6 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்தில் 87 படைக்கலன் (துப்பாக்கி) உரிமம் பெற்றவர்கள் தங்களது படைக்கலனை உடன் அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். சி-விஜில் (C-Vigil App) எனும் செயலி இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை புகார் அளிக்கவும் வெளியிடப்பட்டுள்ளது.
எந்தவொரு குடிமகனும் தங்கள் பகுதியில் தேர்தல் நடைபெறும் போது ஏற்படும் விதிமுறை மீறல்களை இந்த செயலி மூலம் புகார் அளிக்கலாம். இதற்காக 044-27660641, 044-27660642, 044-27660643, 044-27660644 மற்றும் இலவச தொலைப்பேசி எண் 1800 425 8515 ஆகிய எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் புகாரைத் தெரிவிக்கலாம்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க, மார்ச் 14ஆம் முதல் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன? இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது தேர்தல் கட்டுப்பாடுகள்!