திருவள்ளூர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ்) தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வின் இறுதி முடிவுகள் கடந்த ஏப்.16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், ஆவடி சரஸ்வதி நகரைச் சேர்ந்த புவனேஷ் ராம் (27) என்பவர், தமிழகத்தில் முதல் மாணவராகவும், இந்திய அளவில் 41வது இடத்தைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதனைப் பாராட்டும் விதமாக, நேற்று முன்தினம்(ஏப்.20) இவர் பயின்ற தனியார் ஐ.ஏ.எஸ் நிறுவனம் சார்பில், புவனேஷ் ராம் மற்றும் இந்திய அளவில் 314வது இடத்தைப் பிடித்த மயிலாப்பூரைச் சேர்ந்த விக்னேஷ், 347வது இடம் பிடித்த திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியைச் சேர்ந்த அரவிந்த் குமரன் ஆகியோருக்குப் பாராட்டு விழா நடந்தது.
இந்தப் பாராட்டு விழாவில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு, குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டினர்.
அதைத் தொடர்ந்து நேற்று(ஏப்.21) காலை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் புவனேஷ் ராம் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்துப் பாராட்டி, சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின்னர் பேசிய மாணவர் புவனேஷ்ராம், "அகில இந்திய அளவில் குடிமைப் பணித் தேர்வில் 41வது இடமும், தமிழகத்தில் முதல் இடமும் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. common sense, commitment to the case, communication, compassion இந்த 4C தான் என்னுடைய தாரக மந்திரம்.
வருங்காலங்களில் தேர்வு எழுதுபவர்கள் தேர்வை எதிர்கொள்ளக் கடந்த கால வினாத்தாள்களைப் படிக்கவும், எவ்விதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதை அறிந்து அதற்கேற்றவாறு பதிலளிக்கவும், பயமின்றித் தேர்வை அணுக வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஜினிக்கு லோகேஷ் கொடுத்த ஓல்டு பஞ்ச் - ஒரிஜினலாக சொன்னது யார்? - COOLIE Thalaivar171