திருநெல்வேலி: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்ககை விடுத்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பருவ மழையினை எதிர்கொள்ள அரசு அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் வைத்து பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா, "திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் 269.69 கி.மீ மழைநீர் வடிகால் உள்ளது. இதில், துரித நடவடிக்கை மேற்கொண்டு 232.69 கி.மீ துரத்திற்கு மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சார்பாக ஜேசிபி மற்றும் ஜெனரேட்டர்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், டீசல் இன்ஜின்கள், மற்றும் லாரிகள் தயார் நிலையில் உள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் சுரங்கப்பாதைகளின் நிலை என்ன? நம்பி போகலாமா?
மரம் அறுக்கும் இயந்திரங்கள்: தச்சநல்லூர் மண்டலத்தில் 5, பாளையங்கோட்டை மண்டலத்தில் 1, மேலப்பாளையம் மண்டலத்தில் 3, திருநெல்வேலி மண்டலத்தில் 2 என மொத்தம் 11 மரம் அறுக்கும் இயந்திரங்களும், டீசல் இன்ஜின்கள் தச்சநல்லூர் மண்டலத்தில் 3, பாளையங்கோட்டை மண்டலத்தில் 3, மேலப்பாளையம் மண்டலத்தில் 6, திருநெல்வேலி மண்டலத்தில் 1 என மொத்தம் 13 டீசல் இன்ஜின்களும் உள்ளனர்.
லாரி மற்றும் ஜேசிபி: தச்சநல்லூர் மண்டலத்தில் 1, பாளையங்கோட்டை மண்டலத்தில் 1, மேலப்பாளையம் மண்டலத்தில் 1, திருநெல்வேலி மண்டலத்தில் 1 என மொத்தம் 4 லாரிகள் உள்ளன. மாநகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி வாகனம் தச்சநல்லூர் மண்டலத்தில் 2, பாளையங்கோட்டை மண்டலத்தில் 2, மேலப்பாளையம் மண்டலத்தில் 2, திருநெல்வேலி மண்டலத்தில் 2 என மொத்தம் 8 ஜேசிபி வாகனங்கள் என பல்வேறு தளவாட பொருட்கள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது" என கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்போது திருநெல்வேலி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் சீறிப்பாய்ந்த்தால் மாநகரப் பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டது. எனவே இந்தாண்டும் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே நேற்று மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்