திருநெல்வேலி: திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் என்பவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பாக மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன், மாவட்ட மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வந்தார். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் புகார் தெரிவிக்கும் பெட்டியில் மனுவை போட்டுவிட்டு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னத்துரைக்கு அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு, சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு மருத்துவமனையிலேயே பாடங்கள் நடத்தப்பட்டது. இதனை வரவேற்கிறோம்.
ஆனால், சமீபமாக ஒரு செய்தியைக் கேள்விப்படுகிறேன். சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்கள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 300 ரூபாய் பெற்றுக் கொண்டே சின்னத்துரை குடும்பத்துக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, எஸ் சி அட்ராசிட்டி ஆக்ட் படி அவருக்கு கிடைத்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயில், இந்த அரசுக்குச் செலுத்த வேண்டிய பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது தவறான செயல், இதனை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். மேலும், வீட்டிற்கு மாதம் 250 ரூபாய் பராமரிப்புச் செலவிற்காக பணம் பெறப்படுகிறது, அதுவும் தவறானது" எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை ஈடிவி பாரத் தொடர்பு கொண்டு பேசுகையில், "பல்வேறு உதவிகளை மாணவருக்கு மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. சிறப்பான கல்வி அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவருக்குச் சொந்தமாக வீடு இருப்பதால், வேறொரு வீடு வழங்க சட்டத்தில் இடமில்லை என்றாலும், சிறப்பு ஒதுக்கீடாக திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே உள்ள திருமால் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
13 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அந்த வீட்டிற்கு, 12 லட்சம் ரூபாய் மானியமாக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள பணமும் அவர்களிடம் வசூல் செய்யப்படவில்லை. தன்னார்வலர்கள், சமூக நலனில் அக்கறை கொண்ட நபர்கள், கொடையாளர்கள் மூலமாக பணம் பெறப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது" என விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் நிலத் தரகர் தலை துண்டித்து கொலை.. என்ன நடந்தது? - Thoothukudi Murder