தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் "அருள்மிகு"சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோயில் கடற்கரையோரம் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.
மேலும் திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கோயில் முன்புள்ள கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளாக வந்துள்ளவர்கள் கடற்கரை பகுதியில் குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகின்றனர்.
பொதுவாக கடல் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கும். அதன்பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பும். இந்தநிலையில் இரண்டாவது நாளாக இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கடற்கரை பகுதியில் கடல் சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி காணப்படுகிறது.
இந்தநிலையில், ஆபத்தை உணராமல் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதன் மேல் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இதற்கிடையில் கிராமபுறங்களில் கோயில்களுக்கு சிலை செய்யும் போது சேதமடையும் சிலைகளை நீர்நிலைகளில் போடுவார்கள்.
அவ்வாறாக கடலுக்குள் போடப்பட்ட அம்மன் சிலை, பைரவர் சிலை என மொத்தம் மூன்று சிலைகளை கடலிலிருந்து வெளியே எடுத்து வைத்துள்ளனர். அதே போல் கடற்கரை பகுதியில் கடல் மண்ணை பிடித்து சிவலிங்க வடிவம் கொடுத்து சிவலிங்க பூஜையில் சில பக்தர்கள் ஈடுபட்டனர். அதற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்து வழிபாடும் செய்தனர்.
இதையும் படிங்க: கோவை மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு.. அழுதுகொண்டே சென்ற மீனா லோகு.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட்!