தூத்துக்குடி: திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு முருகனை தரிசனம் செய்ய வருகை புரிந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி விழா என்பது உலக புகழ்பெற்ற விழாவாக இருந்து வருகிறது. மொத்தம் ஆறு நாட்கள் நடைபெறும் இந்த கந்தசஷ்டி விழாவின் இறுதியாக ஆறாம் நாளன்று பிரசித்து பெற்ற நிகழ்ச்சி சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
சூரசம்ஹாரத்தின் சிறப்பு: சூரசம்ஹாரம் என்பது சூரன் எனப்படும் அசுரனை முருகன் வேலால் வதம் செய்யும் நிகழ்வாகும். இந்நிகழ்வினை பார்த்துவிட்டு கடலில் புனித நீராடி சென்றால் மனதில் நினைத்த அனைத்த காரியமும் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே ஆண்டுதோறும் பொதுமக்கள் 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருந்து ஆறாம் நாளில் சூரசம்ஹாரம் பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக திருச்செந்தூர் நோக்கி படையெடுப்பார்கள்.
கோயிலை நோக்கி படையெடுக்கும் மக்கள்: அந்த வகையில் இந்த ஆண்டும் வழக்கம் போல் திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார விழா நடைபெறவுள்ளது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதல் குவிந்த வண்ணம் உள்ளனர். கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, காஞ்சிபுரம், திருச்சி, சென்னை என அனைத்து வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்தும் சூரசம்ஹாரம் காண வருகை தந்துள்ளதால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.
இதையும் படிங்க: 4,000 போலீசார் பாதுகாப்பு; 20 இடங்களில் பார்க்கிங் வசதி; சூரசம்ஹாரத்துக்கு முழுவீச்சில் தயாராகும் திருச்செந்தூர்!
இந்நிலையில் இந்த நிகழ்வானது இன்று மாலை 4.15 மணி முதல் 6.00 வரை நடைபெறவுள்ளது. அதில் கோயிலின் எதிரே உள்ள கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்வில் முருகன் தனது தாயிடம் ஆசி பெற்று வாங்கி வந்த வேலை கொண்டு சூரனை வதம் செய்வார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: பாதுகாப்பு ஏற்பாடு பொருத்தவரை தமிழக கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், தென்மண்டல ஐஜி, ஐந்து மாவட்ட எஸ்பிக்கள் ஆகியோர் தலைமையில் சுமார் 4500 போலீசார் திருச்செந்தூரை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருட்டுப் போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஆங்காங்கே உயர்கோபுரங்கள் அனைத்தும், சிசிடிவி கேமராக்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பட் ஜான் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அனுமதி சீட்டு முக்கியம்: அதேபோல் சிறப்பு அனுமதி சீட்டு வைத்திருக்கும் நபர்கள் மட்டும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் கோயிலின் வளாகத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்செந்தூரை சுற்றி ஆங்காங்கே மொத்தம் 20 இடங்களில் வாகன நிறுத்த வசதி காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நெல்லை, தூத்துக்குடி போன்ற பகுதியிலிருந்து வருபவர்கள்கென தனித்தனியாக பார்க்கிங் வசதி ஊருக்கு வெளியே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போதுமான வசதிகள் இல்லை: இதற்கிடையே சூரசம்ஹாரத்தை முன்னிட்டு முருகனை தரிசனம் செய்ய வந்த புதுச்சேரி மரக்காணம் சேர்ந்த ராஜ வர்மன் கூறுகையில், “பக்தர்களுக்கு கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை. அதேபோல் சாமி தரிசனத்தின் போதும் பக்தர்களுக்கு முறையான வரிசை, வசதியும் ஏற்படுத்தப் படுத்தபட்டுள்ளதாக தெரிவில்லை" என்றார்.
சாமி தரிசனத்தில் சிரமப்படுகிறோம்: இதையடுத்து பேசிய லோகேஷ் கூறுகையில், “ சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் மிகுந்த சிரமத்தோடு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுகிறது. அதேபோல் கழிவறை வசதி சரிவரை இல்லாததால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என தெரிந்தும் போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை. குடும்பத்தோடு வர வேண்டுமென ஆசையாக உள்ளது. ஆனால் இங்கு இருக்கும் நிலையைப் பார்த்தால் பெண்களை அழைத்து வருவதற்கே பயமாக இருக்கிறது” என்றார்.
களைகட்டிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: அதே சமயம் அரசு தகுந்த முறையில் முன்னேற்பாடுகளை செய்திருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து சூரசம்ஹாரத்தை காண மக்கள் குடும்பம் குடும்பமாக வந்த வண்ணம் உள்ளதால் திருசெந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்