நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு யானை, காட்டெருமை, கரடி, மான், புலி, சிறுத்தை மற்றும் காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால், அப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்படுகிறது.
இதனால் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. யானை, மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் சாலை ஓரங்களில் தென்படுகின்றன. அந்த வகையில், முதுமலை சிங்காரா பகுதியில் சாலையில், புலி ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். சாலை ஓரம் நடந்துச் சென்ற புலி, திடீரென சாலையை கடந்து சென்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புலி நடமாட்டம் காணப்படுவதால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், அப்பகுதியில் இறங்கி புகைப்படம், செல்பி எடுக்கக்கூடாது எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பவானிசாகர் அருகே தர்பூசணி பறிக்கச் சென்ற விவசாயி யானை தாக்கி பலி! - elephant attacked by farmer