சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 8 பேர் சரணடைந்ததாக தகவல் வெளியானது. பின்னர் கைது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட போது, திருவேங்கடம் என்ற நபரை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது என்கவுண்டர் செய்தனர். இதையடுத்து, மீதமுள்ள 10 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு ரவுடிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிப் படுகொலை செய்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் இதில் தொடர்புடைய ஒவ்வொரு நபர்களையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், பிரபல ரவுடியின் மனைவியும், வழக்கறிஞருமான மலர்கொடி சேகர், அவருக்கு உதவியதாக வழக்கறிஞர் ஹரிகரன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ்குமார், பிரபல கஞ்சா வியாபாரியும் ரவுடியுமான வட சென்னை அஞ்சலை, திருவள்ளூர் மாவட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஹரிதரன் ஆகியோரை இதுவரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கு மூளையாக செயல்பட்ட சென்னை மணலி அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.
மேலும், அவர் பிரபல ரவுடி சம்போ செந்தில் என்பவருடன் தொடர்பில் இருந்து கொண்டு கொலை செய்த நபர்களுக்கு பணப் பரிவர்த்தனை செய்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 18வதாக மேலும் ஒருவரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஈடுபட்டவர்களுக்கு நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன்படி, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார், முகிலன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேராசிரியர்களை போலி கணக்கு காண்பித்த 124 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்; அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!