மதுரை: மதுரை மாவட்டம் ஆத்திகுளம் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக, வீடு இல்லாத பொதுமக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் யோஜனா திட்டத்தின் கீழ், சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று அடுக்குகளைக் கொண்ட மாடி கட்டிடம், கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த 2023 நவம்பர் 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இருப்பினும், இந்த அடுக்குமாடி குடியிருப்பில், குறைந்த அளவில் பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் காலியாகவே உள்ளன. மேலும், குடியிருப்போருக்குத் தேவையான பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை தற்போது துவங்கி நடைபெற்று வரும் நிலையில், சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பில் மதுரையிலேயே கட்டிய இந்த கட்டடத்திற்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் வந்த மர்ம கும்பல், வளாகம் முழுவதும் உள்ள ஜன்னல் கதவு உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள், தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்கள் எடுத்த வீடியோ மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ரகளையில் ஈடுபட்ட கும்பலைத் தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கோ புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்து மணிகண்டன் மற்றும் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த வல்லரசு ஆகிய மூன்று பேரும் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ப்ரீ வெட்டிங் ஷூட்டை தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் ரீல்ஸ் எடுத்த 38 மாணவர்கள் சஸ்பெண்ட்!