தூத்துக்குடி: நாடு முழுவதும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (பிப்.16) வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், வ.உ.சி துறைமுக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மத்திய அரசு, துறைமுகங்களை தனியார்மயப்படுத்துவதை கண்டித்தும், தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதைக் கண்டித்தும், துறைமுக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய ஒப்பந்தம், போனஸ் உள்பட பண பலன்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்தும், துறைமுகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட துறைமுக ஊழியர்கள், தூத்துக்குடி துறைமுகம் வாயில் முன்பு மத்திய அரசு, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் துறைமுக நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக, துறைமுக ஊழியர்கள் யாரும் பணிக்குச் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இதனால் சரக்குகள் ஏற்றி, இறக்கும் பணி மற்றும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. துறைமுக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆதி கருவண்ணராயர் கோயில் திருவிழா முன்னேற்பாடு கூட்டத்தில் வாக்குவாதம் - கூட்டம் ஒத்திவைப்பு!