தூத்துக்குடி: கடந்த 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 2001ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி முதல் 2006ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட 6.50 கோடி ரூபாய் மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்த நிலையில், இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆஜராகாத நிலையில், அவரது மகன்கள் அனந்த பத்மநாதன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் அவரது தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தன் ஆகிய 5 பேர் ஆஜராகினர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மொத்தம் 108 சாட்சியங்களில் 80 சாட்சியங்கள் தற்போது வரை விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கிராம நிர்வாக அலுவலர் மைதிலி மற்றும் துணை வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், இந்த வழக்கை தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஐயப்பன் இம்மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வழக்கறிஞர்களுக்கான தொழில் நடைமுறைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த கோரி மனுத்தாக்கல்!