மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்க, கடந்த 8 நாட்களாக வனத்துறை அதிகாரிகள் கூண்டுகளை வைத்தும், தெர்மல் ட்ரோன் கேமரா உதவியுடனும் சிறுத்தையை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில், அடர்ந்த காடுகள் போல் உள்ள இடங்களான மஞ்சலாறு, மகிமலையாறு, பழையகாவேரி ஆறுகளின் கரையோரப் பகுதிகளில், சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினரால் 7 கூண்டுகள் வைக்கப்பட்டது.
இதற்கிடையே, நண்டலாறு மற்றும் வீரசோழன் ஆறு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் சிறுத்தை காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்ததன் அடிப்படையில், காட்டுப் பகுதி, ஆறுகள், உள்ளிட்ட இடங்களிலும் அதிநவீன சென்சார் பொருத்திய கேமராக்கள், ராட்சச கூண்டுகள், வலைகள் மற்றும் கூண்டுகளில் உயிருடன் ஆடு, பன்றி மற்றும் இறைச்சி வைத்து தேடி வந்தனர். ஆனால், சிறுத்தை சிக்காமல் அதிகாரிகளுக்கு தொடர்ந்து போக்கு காட்டி வந்தது.
இதனையடுத்து, கோயம்புத்தூரில் இருந்து WWF - INDIA நிபுணர் குழு முப்பது கேமரா ட்ரோன்களுடன் களத்தில் பணியை தொடங்கி, கூண்டுகள் வைத்து தேடிவந்தனர். அங்கும் சிறுத்தை சிக்கவில்லை. 8 வது நாட்களாக சிறுத்தையை பிடிப்பதற்கு தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் முதல், மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்திருந்தார். இதனால், அருகாமையில் உள்ள மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) மயிலாடுதுறை நகர் அருகே நல்லத்துக்குடி ஊராட்சியில், சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்ததாக, அப்பகுதியில் பழைய பயன்பாடற்ற ரயில்வே தடத்தில் உள்ள தார் பிளாண்டில் பணியாற்றும் ஹரிஹரன் மற்றும் சிலர் தெரிவித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கிடைத்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே, சிறுத்தையின் நடமாட்டம் குறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு, சிறுத்தையின் கால் தடம் எனக் கூறப்படும் சந்தேகத்துக்கு இடமான கால் தடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, தெர்மல் டிரோன் கேமரா கொண்டு மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது செய்த ஆய்வில், சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தடயமும் சிக்கவில்லை என்றும், நாளை (வியாழக்கிழமை) காலை சோதனை செய்த பிறகு இப்பகுதியில் சிறுத்தை வந்துள்ளதா என உறுதி செய்ய முடியும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என்று திருவாரூர் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) நல்லத்துக்குடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து, டி23 சிறுத்தையை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன், காளன் உள்ளிட்ட குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மரத்திலிருந்து சிறுத்தை கீழே குதித்துச் சென்றதாக கூறப்பட்ட தகவலின் பேரில், அவ்விடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், அப்பகுதியில் சிறுத்தை மரத்தின் மீது ஏறியதற்கான தடயங்கள் மற்றும் கால் தடயங்கள் உறுதி செய்யப்படவில்லை. இதனால், சிறுத்தையைப் பார்த்தாக கூறியவர்களிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதிக்கு பிறகு சிறுத்தையின் தடயங்கள் எதுவும் கிடைக்காததால் தொடர்ந்து பொதுமக்கள் அளிக்கும் தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இரட்டை பெண் குழந்தைகள் உள்பட ஆறு பேர் உயிரிழந்த மதுரை கோர விபத்து நிகழ்ந்தது எப்படி? - Madurai Car Accident