சென்னை: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் (PM-JAY) ஆரோக்கிய யோஜனாவின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் வரவேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பரிந்துரைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வயது வரம்பை 60 ஆக குறைத்தல்: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற வகையில், இந்தியாவின் முதியோர் எண்ணிக்கை 104 மில்லியனுக்கு பெருகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், காப்பீடு பெறுபவர்களின் வயது வரம்பு 70இல் இருந்து துவங்குவதால், கணிசமான எண்ணிக்கையில் ஆரோக்கிய பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள் இதில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த காப்பீட்டால் முழுமையாக பயனடைய வயது வரம்பை 60ஆக குறைக்க வேண்டும்.
காப்பீடுத் தொகையின் உச்ச வரம்பை 10 லட்சமாக உயர்த்துதல்: தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 லட்சம் காப்பீடு பலனளிக்கும் தான். ஆனால், அதே வேளையில், தீவிர சிகிச்சைக்கு இந்த தொகை பெரும்பாலும் போதுமானதாக இருக்காது. வயதான நோயாளிகள் நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் தேவை ஏற்படலாம். இந்த வரம்பை 10 லட்சமாக உயர்த்தினால், அது ஏழை நோயாளிகளின் நிதிச்சுமையை கணிசமாக குறைக்கும்.
வயதான பெண்கள் மற்றும் கிராமப்புற இலக்கு: 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வயதான ஆண்களை விட வயதான பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. ஆகையால், அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர். அதிலும், முதியவர்களில் 71% பேர் கிராமப்புறங்களில் வசிப்பதால், கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பாலின உணர்திறன் ஆகியவற்றை உறுதி செய்து சமமான அணுகல் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி மூத்த குடிமக்கள்: மக்கள் தொகையில் 1 லட்சம் முதியோர்களில் 5,177 பேர் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களது சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் அவசியம். PM-JAY திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி முதியோர்களுக்கென்று பிரத்யேக ஏற்பாடு தேவை.
ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டை: ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டை வயதானவர்களுக்கு பாக்கெட் செலவினங்களை குறைக்கக்கூடிய ஒரு சிறந்த முயற்சி. இதன் நன்மைகளை மேலும் விரிவுபடுத்தி, கடைக்கோடி கிராமத்தில் இருப்பவர்களும் அதன் மூலம் பயனடைய வேண்டும்.
இந்தப் பரிந்துரைகள் அரசின் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் வலுவாக்கி, நாட்டின் கணக்கில்லா முதியோர்களின் பாதுகாப்புக்கு உதவும் என நம்புகிறேன். நாட்டில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் உங்கள் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு நன்றி'' என அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்