கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த 24 பேர், சீர்காழி, ராணிப்பேட்டை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தலா இரண்டு பேர் என மொத்தம் 30 தமிழர்கள் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றனர். இந்த நிலையில், அங்கு அவர்கள் நேற்றிரவு ஆதி கைலாசம் எனும் ஆன்மீக தளத்திற்கு வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஆதி கைலாசத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, 18 கிலோமீட்டர் தொலைவில் சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாமல், அங்கு சிக்கித் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர்களுக்கு என்னவானதோ என்று எண்ணி அவர்களின் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர்.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் நிலச்சரிவு; ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழர்கள் 30 பேரின் நிலை என்ன? தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர்!
இதையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை முதல் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றது.
30 தமிழர்கள் மீட்பு
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) September 15, 2024
#uttrakhand #tamilnadunews #TNGovt #delhi #உத்தரகாண்ட் #etvbharattamilnadu pic.twitter.com/sy9Kw0Iuhp
இதன்படி, ஒரு முறையில் 5 பேர் விதமாக மீட்கப்பட்டனர். இதில் 30 பேரும் பாதுகாப்பாக தாட்சுலா என்ற பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளது என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது தமிழக முதலமைச்சர் உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள தமிழர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, கவலைப்பட வேண்டாம் அவர்களை விரைந்து மீட்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
தற்போது முகாமில் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், இவர்கள் அனைவரும்அங்கே ஓரிருநாட்கள் தங்கி, பின்னர் புதுதில்லி வந்து விமானம் மூலம் தமிழ்நாடு திரும்ப உள்ளார்கள் என தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.