தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கழுகுமலை, துரைசாமிபுரம், வெங்கடேஸ்வரபுரம், காலாங்கரைப்பட்டி, சங்கரலிங்கபுரம், கல்லூரணி, குமரெட்டியாபுரம் ஆகிய கிராமங்களில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று (செவ்வாய்க்கிழ்மை) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, பிரச்சாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, "எல்லா தேர்தலிலும் ஒரு ஓட்டு தான் போடுகிறோம். ஆனால், இந்த தேர்தலில் போடக்கூடிய ஓட்டின் வலிமை அதிகம். தமிழகத்திலேயே போட்டி என்றால், அது இரண்டு கட்சிகளுக்கு மட்டும் தான். இம்முறை தூத்துக்குடி தொகுதியில் பாஜக களம் காணவில்லை. வாய்ப்பை கூட்டணி கட்சிக்கு கொடுத்துவிட்டனர்.
ஜெயலலிதா கட்டிக்காத்த இரட்டை இலை சின்னத்தில், தூத்துக்குடி தொகுதியில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க, அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். முதலமைச்சரான பின், ஒரு பவுன் தாலி கொடுத்த ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா மட்டும் தான். 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்' இதுதான் உலக நீதி.
அந்த வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அருமை, பெருமை எல்லாம் இன்று தான் மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. 2006ல் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்கள்? நிலம் இல்லாதவருக்கெல்லாம், இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்றனர். அந்த காலத்தில் ஆண்ட அரசர்கள், மன்னர்கள் என அனைவரும் மக்களை ஏமாற்றாமல், சொன்ன சொல்லை காப்பாத்தினார்கள். ஆனால், இன்று தமிழக மக்களை ஏமாற்றி, வஞ்சிக்கும் ஆட்சியாகவே திமுக ஆட்சி இருந்து வருகிறது.
ஒரே மாவட்டத்தில், ஒரே தொகுதிக்கு உள்ளேயே, ஏற்றத்தாழ்வு பார்த்து பிரிக்கின்ற கட்சி திமுக மட்டுமே. ஆகவே, ஒத்த ஓட்டுக் கூட உதயசூரியனுக்கு போடக்கூடாது. அதேபோல், இன்று தூத்துக்குடி தொகுதியை பொறுத்த வரையில், பாஜகவை சார்ந்தவர்களே அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டிய சூழல்தான் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகி வீரர் சுந்தரலிங்கத்தின் 254வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகம் அமைந்துள்ள சுந்தரலிங்கம் திருவுருவ சிலைக்கு, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், கடம்பூர் ராஜூ முன்னிலையில், தங்கள் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: 'திமுக என்றாலே குடும்ப அரசியல், ஊழல், பணம் சுரண்டல் என்பதே அர்த்தம்' - ஜே.பி.நட்டா விமர்சனம் - Lok Sabha Election 2024