தேனி: தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. இந்த முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணித்து, பராமரிப்பதற்காக கடந்த 2014இல் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. பின், 2022ஆம் ஆண்டில் இந்தக் குழுவில் இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்கள் இருவரைச் சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கண்காணிப்பு குழுவினர்: தற்போது இந்த குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் ராகேஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழுமத் தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக்குமார் சிங், கேரள நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமைப் பொறியாளர் பிரியேஷ் உள்ளனர்.
அணையில் ஆய்வு: இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையை இக்குழுவினர் கடந்த மார்ச் 27ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, இன்றைய முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமான 118.85 அடியை அறிந்து கொண்டு
ஆய்வு மேற்கொள்ளுவதற்காக, கேரள மாநிலம் தேக்கடி படகுத்துறை பகுதியிலிருந்து அதிகாரிகள் படகின் மூலம் அணைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். இந்த ஆய்வில் பருவநிலை மாற்றத்திக்கு தயாராகும் வகையில் வழக்கப் பணிகள் குறித்தும், மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதி, கேலரி பகுதி, வல்லகடவு பாதை உள்ளிட்டவற்றை கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
ஆய்வின் முக்கியத்துவம்: மேலும், அங்கு மதகுகளின் இயக்கம் சரிபார்த்தல், அணையின் பலத்தை நிரூபிக்கும் சுரங்கக் கசிவு நீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன. இன்றும், நாளையும் நடைபெற உள்ள இந்த ஆய்வின் ஆலோசனைக் கூட்டம் குறித்த அறிக்கை முடிவுகள் அரசுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீர்மட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக மதுரையில் இரு தனியார் குடிநீர் நிறுவனம் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு! -