சென்னை: சென்னை கிண்டி கலைஞர் உயர் சிகிச்சை மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி நேற்றைய தினம் நோயாளியின் உறவினரால் கொடூரமான தாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில், இன்று (நவ.14) காலை அவசர சிகிச்சைகள் தவிர அனைத்து சேவைகளையும் புறக்கணித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போராட்டம் நடத்தினர்.
இதனை அடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவர்கள் சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். அதன்படி, மாநில தலைவர் செந்தில், மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், சென்னை தலைமை நிலைய செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் மருத்துவமனைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்குரிய ஆணை மருத்துவ கல்வி இயக்குநரால் கையொப்பமிட்டு வழங்கப்பட்டது. மேலும், இந்த அறிக்கையில் உள்ள அனைத்து விஷயங்களும் மீண்டும் ஒரு மாதம் கழித்து ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிண்டி அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்: முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
மேலும், அரசு மருத்துவமனைகளும் அரசு மருத்துவர்களும் தவறாக உயர் அதிகாரிகளால் சித்தரிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஏதாவது தவறு இருந்தால் முறையாக விசாரணை நடத்தி அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறுகளை வெளியிடக்கூடாது என்றும் சங்கம் கோரிக்கை வைத்தது.
அதன்பின் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க கேபினட் குழு கூட்டம் உடனடியாக நடத்தப்பட்டு, பேச்சுவார்த்தைகள் குறித்து கேபினட் உறுப்பினர்களுடன் விவாதிக்கப்பட்டது. போராட்டம் குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேவைப்பட்டால் ஒரு மாதம் கழித்து கோரிக்கைகள் நடைபெறாவிட்டால் போராட்டத்தை தொடங்கலாம் என்றும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே, பெரும்பான்மையான கருத்துக்கு ஏற்ப போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டதாக கேபினட் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், நாளை (நவ.15) காலை முதல் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்த அனைத்து போராட்டங்களையும் வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாது, நாளை (நவ.15) காலை முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளும் அரசு மருத்துவமனைகளையும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அனைத்து சேவைகளும் எந்த வித தடையும் இன்றி வழக்கம் போல இயங்கும் என தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்