சென்னை: தமிழகத்தில் வீட்டு உபயோக மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இலவசமாக வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் ரத்து செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு இருந்தனர்.
அதில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வைத்திருந்தால், ஒரு வீட்டுக்கு மட்டுமே இலவச 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் எனவும் மற்ற அனைத்து வீட்டு இணைப்புகளுக்கும், 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படும் எனவும் வதந்தி பரவியது.
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் எனப் பரவிய செய்திக்கு மின்சார வாரியம் வட்டாரத்தில் இருந்து ஈடிவி பாரத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்த தகவல் முழுமையும் வதந்தி எனவும், இதுவரை இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யும்படி எந்த உத்தரவும் வரவில்லை என விளக்கம் அளித்தனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்குமாறு மின் வாரியம் உத்தரவிட்டது. ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்பவர்களும்கூட, அனைத்து இணைப்புக்கும் ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்யலாம் அல்லது வாடகைக்கு விட்டிருந்தால், அவர்களின் ஆதார் எண்ணைக்கொண்டு வாடகைக்கு விட்டுள்ளதாக குறிப்பிட்டு பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனால், 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் ரத்து செய்யப்படுமோ? என அப்போதே மக்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. ஆனால், அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படாது என உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான செய்தி குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மறுப்பு செய்தி குறிப்பு.
சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சியினால் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள் மற்றும் வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை.
வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் வாயிலாக தெளிவுபடுத்தப்படுகிறது' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சர்வதேச கராத்தே போட்டி.. 22 பதக்கங்களுடன் நாடு திரும்பிய தமிழக வீராங்கனைகளைக்கு உற்சாக வரவேற்பு! - International Karate Competition