சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டபடிப்புகளான கால்நடை மருத்துவப்படிப்பிற்கு 14,497 மாணவர்களும், பிடெக் படிப்பில் சேர்வதற்கு 3,000 மாணவர்கள் என 17,497 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் 80 இடங்களும் , தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என 660 இடங்கள் உள்ளன.
உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பிடெக்) 40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக்கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் உள்ளன. இதில் கடந்த ஆண்டைப் போலவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு7.5 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தப் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு 12 ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர முடியும்.
கால்நடை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 3ந் தேதி முதல் 28ந் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கு 14 ஆயிரத்து 474 மாணவர்களும், தொழில்நுட்ப பட்டப்படிப்பில் சேர 3,000 பேர் என 17,474 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நாளை (ஆகஸ்ட் 7) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிச் சீருடைகள் வழங்குவதில் தாமதமா? ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி!