தேனி: தமிழ்நாடு - கேரளா எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது.
அதிலும் குறிப்பாக, கூடலூர், லோயர் கேம்ப் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு இருபோக நெல் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும், தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
அந்த வகையில், தேனி மாவட்ட கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள 14,707 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முதல் போக பாசன வசதிக்காக கடந்த ஜூன் 1ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று (ஜூலை 29) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்துக் காணப்படுகிறது.
இதுமட்டும் அல்லாது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து நேற்று (ஜூலை 29) 1457 கன அடியாக இருந்த நிலையில், இன்று (ஜூலை 30) அணைப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து 3616 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1341 கன அடியாகவும், அணையின் இருப்பு 4460 மில்லி கன அடியாகவும் இருந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 128.90 அடியாக இருந்து வருகிறது. இவற்றைத் தவிர்த்து, அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இன்றும் (ஜூலை 30) மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, முல்லை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/30-07-2024/22082055_etvwc.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "பருவமழைக்கு முன் பழுதடைந்த மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு!