சென்னை: காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஃபெலிக்ஸ் தரப்பில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடிக்க தயாராக இருப்பதாகவும், ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஃபெலிக்ஸ் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை வேண்டுமென்றே வெளியிட்டுள்ளார். அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சவுக்கு சங்கருடன் இணைந்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதனால் ஜாமீன் வழங்க கூடாது'' என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி. தமிழ்செல்வி, காவல்துறை பதில் அறிக்கையில் என்ன உள்ளது என்பதை பார்த்த பின் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்து வழக்கை ஜூலை 31ம் தேதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: வாட்டர் டேங்க் மீது பெண் தோழியுடன் வீடியோ கால்.. தவறி விழுந்த சிறுவன் பலி.. சென்னையில் நடந்தது என்ன?